கடலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Update: 2021-04-27 21:01 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியிலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிக்கான வாக்குகள் சி.முட்லூர் அரசு கல்லூரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளுக்கான வாக்குகள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியிலும், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்குகள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் வருகிற 2-ந்தேதி எண்ணப்படுகிறது.
வாக்குகள் எண்ணப் படுவதை கண்காணிக்க 4 மையங்களுக்கு தலா ஒரு பார்வையாளரை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் சட்டமன்ற தொகுதிக்கு தலா ஒரு தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதனால் கடலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக 5 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்