மதுரையில் 539 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று புதிதாக 539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ்
மதுரையில் நேற்று ஒரே நாளில் 539 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 5 ஆயிரத்து 750 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் 539 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 415 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 29 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை
இதுபோல், நேற்று 399 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 280 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 24 ஆயித்து 430 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,073 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 1,050 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 465 பேர் கண்காணிப்பு மையங்களிலும், 1,300 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், வெளிமாவட்டத்தை சேர்ந்த 370 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்றும் மதுரையில் புதிதாக 2 பேர் உயிரிழந்தனர். மதுரையை சேர்ந்த 46 வயது ஆண் மற்றும் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்ததுடன், வேறு சில இணை நோய்களும் இருந்ததால் அவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.