கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-27 19:49 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனரா? என்று நகராட்சி ஆணையர் சுபாஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் 4  ரோடு, பஸ் நிறுத்தம் ரோடு, தா.பழூர் ரோடு, விருத்தாசலம் ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீண்டும் அவற்றை விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பஸ் டிரைவர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவல் குறித்து எடுத்துக்கூறி, அறிவுரை வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நான்குரோடு வழியாக சென்னை சென்ற அரசு பஸ்சில் டிரைவர் முககவசம் அணியாமல் இருப்பதை பார்த்த நகராட்சி ஆணையர், அந்த பஸ்சில் ஏறி டிரைவரை முககவசம் அணிய செய்து அறிவுரை வழங்கியதுடன், பயணிகளும் முக கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும், கைகளுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும், என்று அறிவுறுத்தினார். முக கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி மூலம் முககவசம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்