இளநீர், கரும்புச்சாறு விற்பனைக்கு மாறிய குறுந்தொழில் உரிமையாளர்
இளநீர், கரும்புச்சாறு விற்பனைக்கு மாறிய குறுந்தொழில் உரிமையாளர்
கோவை.
கோவை சேரன் மாநகரில் என்ஜினீயரிங் ரீவைண்டிங் தொழில் செய்யும் குறுந்தொழில் முனைவோர் கனகராஜ். போதிய ஜாப் ஆர்டர் கிடைக்காததால் கரும்புச் சாறு மற்றும் இளநீர் விற்பனை செய்து வாழ்வாதாரத்தை காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து கனகராஜ் கூறியதாவது:-
கோவைமாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. என்ஜினீயரிங் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்துள்ளேன்.
உதாரணமாக தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையின் போது நாங்கள் நெருக்கடியை எதிர் கொண்டோம். ஆனால் அப்பொழுது எங்களிடம் போதுமான அளவு ஜாப் ஆர்டர் இருந்தது.
அதை தொடர்ந்து ஜி.எஸ்.டி திட்டம் குறுந் தொழில் முனைவோரை பாதித்தது. கொரோனா முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத சூழ்நிலையில், இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது
குறுந்தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் தாறுமாறாக அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் விலை காரணமாக தற்போது ஜாப் ஆர்டர்கள் கணிசமாக குறைந்து விட்டன.
எனது நிறுவனத்தில் ஒரு ஊழியரை பணிக்கு வைத்துள்ளேன். அவருக்கும் கூட வேலை வாய்ப்பு கொடுக்க முடியாத அவலநிலை தற்போது உள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையை எதிர் கொண்ட போது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக எனது நிறுவனத்தின் முன் இளநீர் விற்பனை செய்ய தொடங்கினேன்.
நெருக்கடியான சூழ்நிலையில் அந்த வியாபாரம் என்னை காப்பாற்றியது. தொடர்ந்து தற்பொழுது கரும்பு சாறு விற்பனையும் கூடுதலாக தொடங்கி உள்ளேன்.
இதனால் தற்போது குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவுகிறது. தைரியத்துடன் போராட வேண்டும். தன்னம்பிக்கையை மட்டும் என்றும் இழந்துவிடக்கூடாது.
சோதனைகள், தடைகள் தொழில் துறையினருக்கு புதிதல்ல. இதை மனதில் கொண்டு நிச்சயம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறுகனகராஜ் கூறினார்.