கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கக்கோரி முடி திருத்துவோர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2021-04-27 18:58 GMT
சிவகங்கை, 
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கக்கோரி முடி திருத்துவோர் சங்கத்தினர்  மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனு
சிவகங்கை மாவட்ட மருத்துவ சமுதாய பேரவை மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில், முடி திருத்துவோர் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரிய மால்கள், உடற்பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகளை முழுமையாக அடைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக அந்த கடைகளை நடத்துபவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 
பெரிய கடைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அது போல மருந்து தெளிப்பது, முக கவசம் அணிவது, கடைகளில் ஆட்களை அதிகஅளவில் கூடாத வண்ணம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியாவது முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். 
பாதிப்பு
சிவகங்கை நகர் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 200-க்கும் மேற் பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதனை மட்டுமே நம்பி 200 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை நடத்திவரும் சூழலில் ஏற்கனவே ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டு  கடைகளை திறந்த நிலையில் மீண்டும் முடிதிருத்தும் கடைகளை அடைக்க சொல்வதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்