ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்,
சித்ராபவுர்ணமி அன்று ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் காவிரி அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். மாலையில் புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி காவிரி ஆற்றுக்குள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நம்பெருமாளும், கோவில் யானை ஆண்டாளும் முக்கிய பங்காற்றும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடைமுறைகளினால் பெருமாள் காவிரியாற்றுக்கு வரவில்லை. கோவில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு நடந்து. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கருட மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் சம்பிரதாய நிகழ்ச்சியாக ஆண்டாள் யானை அங்கு வரவழைக்கப்பட்டு பெருமாள் சார்பில் அதற்கு சந்தனம் மற்றும் சடாரி மரியாதை ஆகியவை வழங்கப்பட்டன. பக்தர்களின்றி கோவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.