திருச்சியில் பூட்டை உடைத்து துணிகரம்: சவுதி அரேபிய அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
திருச்சியில் சவுதி அரேபிய அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
திருச்சி,
திருச்சியில் சவுதி அரேபிய அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சவுதி அரேபிய அதிகாரி
திருச்சி கருமண்டபம் ஜெயநகர் விஸ்தரிப்பு நான்காவது தெருவை சேர்ந்தவர் முகமது சயீத் (வயது 45). இவரது மனைவி ரேஷ்மி (32). இவர்களுக்கு இர்பான் (9) என்ற மகனும், மும்தாஜ் (6) என்ற மகளும் உள்ளனர். முகமது சயீத் சவுதி அரேபியாவில் அங்குள்ள அரசு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அந்த நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக முகமது சயீத் இந்தியாவிற்கு வந்து விட்டார். கடந்த 5 மாதங்களாக திருச்சியில் உள்ள வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ரேஷ்மி திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
பெங்களூரு சென்றார்
முகமது சயீத் மகன் இர்பானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குடும்பத்தினர் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவுக்கு சென்றனர். சிகிச்சை முடிந்து நேற்று காலை முகமது சயீத் திருச்சிக்கு திரும்பினார்.
வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
40 பவுன் கொள்ளை
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொருட்கள் எல்லாம் சிதறி அலங்கோலமாக கிடந்தது. உடனடியாக இதுபற்றி முகமது சயீத் திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து செசன்சு கோர்ட்டு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் வேதரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செஷன்ஸ் கோர்ட்டு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாய் கடத்தல்
இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருபவர் குமார். கண்ணாடி கடை அதிபரான இவர் பெல்ஜியம் செப்பர்டு வகையான ஒரு கலப்பின நாயை வளர்த்து வந்தார். இந்த நாய் அந்த தெருவில் இரவு நேரத்தில் யாரையும் வர விடாது. அந்த அளவுக்கு அது காவல் பணியில் துடிப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து அந்த நாயை திடீரென காணவில்லை. எனவே கொள்ளையர்கள் முகமது சயீத் வீட்டில், இல்லை வெளியூர் சென்று விட்டார் என்பதை அறிந்ததும் அந்த நாயால் பிரச்சினை வரும் என கருதி முதலில் திட்டமிட்டு அதனை கடத்திச்சென்று, கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.