கொலை திட்டம் தீட்டிய கூலிப்படையினர் 9 பேர் கைது

புதுக்கோட்டை விடுதியில் தங்கி கொலை திட்டம் தீட்டிய கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-04-27 18:11 GMT
புதுக்கோட்டை, ஏப்.28-
கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை விடுதியில் தங்கி கொலை திட்டம் தீட்டிய கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூலிப்படையினர்
புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நகரப்பகுதியில் தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது சந்தேகப்படும் படி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த 3 பேரையும், மற்றொரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த 6 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அனைவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. மேலும் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மணிகண்டன் (வயது26), கவின்பாபு (23), கார்த்திக் (19), குடவாசல் முகேஷ் (24), கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தாமரைசெல்வன் (20), கும்பகோணத்தை சேர்ந்த அரவிந்த்குமார் (21), திருநாவுக்கரசு (35), புதுக்கோட்டை முகிலன் (37), மயிலாடுதுறை மாவட்டம் புலவனூர் சங்கர் (23) ஆகியோர் என தெரிந்தது.
கள்ளத்தொடர்பு
இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்ய திட்டமிட்டு செல்ல இருந்தது தெரியவந்தது. மேலும் கூலிப்படையை ஏற்பாடு செய்தது சிங்கப்பூரில் வேலைபார்த்து வரும் ஒருவர் என்பதும், அவரது மனைவியை தன்னுடன் வேலை பார்த்து வரும் நண்பர் ஒருவர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்து தீர்த்து கட்ட திட்டமிட்டது தெரியவந்தது.
 மேலும் அவரது நண்பர் தற்போது சொந்த ஊருக்கு வந்திருப்பது தெரிந்தது. போலீசார் கைது செய்துள்ள கூலி படையினர் மீது ஏற்கனவே சந்தேக வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூலிப்படையினரிடம் இருந்து அரிவாள்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்