மொரப்பூர் அருகே விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது
விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எலவடை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் செல்லன். இவரது மனைவி சுகந்தி (வயது 28). இவர் கடந்த 16-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு விவசாய வேலைகளை செய்து விட்டு மதியம் சாப்பாட்டுக்காக வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த அரை பவுன் தோடு, கால் பவுன் மோதிரம் ஆகியவை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் மொரப்பூர் கல்லாவி ரோடு அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானுரை சேர்ந்த முருகன் (33) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிர விசாரணை செய்ததில் எலவடையில் செல்லன் வீட்டில் திருடியது அவர்தான் என தெரியவந்தது. திருடிச்சென்ற முக்கால் பவுன் நகையை இப்பகுதியில் விற்பதற்காக வந்தபோது போலீசில் சிக்கினார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.