தூத்துக்குடி அருகே விபத்து தபால்காரர் உள்பட 2 பேர் பலி
தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் தபால்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் தபால்காரர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தபால்காரர்
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). தபால்காரர்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் புதுக்கோட்டை ராஜீவ்நகரை சேர்ந்த முத்தையா மகன் பரமசிவராஜா (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோரம்பள்ளம் விலக்கில் வந்து கொண்டு இருந்தார். அவர் அந்த ரோட்டை கடக்க முயன்றாராம்.
2 பேர் சாவு
அப்போது, நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ், பரமசிவராஜா ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.