உடுமலை பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
உடுமலை பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.;
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
குறுகிய காலப்பயிர்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது.இங்கு தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், சுரைக்காய் போன்ற பலவகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.குறுகிய காலப்பயிர் என்பது மட்டுமல்லாமல் தொடர் வருமானம் தரக்கூடியது என்பதுவும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.இங்கு விளையும் காய்கறிகள் உடுமலை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இங்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகள் மட்டுமல்லாமல் வெளியூர் மொத்த வியாபாரிகளும் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்.அன்றன்று வரும் காய்கறிகளின் வரத்து மற்றும் தேவையைப் பொறுத்து காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.சமீப காலங்களாக தேவையை விட வரத்து அதிகம் இருப்பதாலும் வெளியூர் மொத்த வியாபாரிகளின் வருகை குறைவாக இருப்பதாலும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது.இந்தநிலையில் வெண்டைக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த முறை தக்காளி சாகுபடி செய்து கடும் நஷ்டத்தை சந்தித்தோம்.இன்றுவரை தக்காளி விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து கண்ணீர் விடும் நிலையே உள்ளது.அதனால் மாற்றுப்பயிர் குறித்து சிந்தித்ததால் வெண்டைக்காய் சாகுபடியைத் தேர்வு செய்தோம்.
வீதியில் கொட்டும் நிலை
வெண்டைக்காய் பயிரிடுவதற்கு ஏக்கருக்கு 3 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படுகிறது.விதைப்பு செய்த 45 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.அதன்பிறகு தினசரி காய்கள் பறிக்கலாம்.ஆனால் வெண்டைக்காய் அறுவடை என்பது சற்று கடினமான பணியாகும்.ஏனென்றால் அறுவடையின் போது காய் மற்றும் செடியிலுள்ள முட்கள் பட்டு கை முழுவதும் புண்ணாகி விடும் அபாயம் உள்ளது.இதனால் கையுறை அணிந்து, கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.
ஏற்கனவே கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் வெண்டைக்காய் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில் அன்றன்று அறுவடை செய்ய வேண்டிய காய்களை அன்றன்று அறுவடை செய்யாவிட்டால் முற்றி வீணாகி விடும்.இதனால் கடும் சிரமத்துக்கு மத்தியில் அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம்.ஆனால் அங்கு போதிய விலை கிடைப்பதில்லை.ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 6 முதல் 8 வரையே விற்பனையாகிறது. சில நாட்களில் விற்பனையாகாமல் வீதியில் கொட்டி விட்டு செல்கிறோம்.தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அறுவடைப் பணிகள் மேற்கொள்கிறோம்.
நஷ்டம்
அதற்கு ஒரு ஆளுக்கு கூலியாக ரூ. 200 கொடுக்கிறோம்.ஒரு ஆள் 20 கிலோ முதல் 25 கிலோ வெண்டைக்காய்களையே பறிக்க முடிகிறது.இதனால் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம்.தற்போது வெண்டைக்காய் வரத்து குறைவாகவே உள்ளது.ஆனாலும் போதிய விலை கிடைக்காததற்குக் காரணம் தெரியவில்லை.
எனவே உழவு ஓட்டி வெண்டைச் செடிகளை அழித்து விட்டு மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய முடிவெடுத்துள்ளோம். ஆனாலும் என்ன பயிர் செய்தால் லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. தோட்டக்கலைத் துறையினரும் வேளாண் வணிகத் துறையினரும் இணைந்து என்ன பருவத்தில் என்ன பயிர் செய்தால் லாபம் கிடைக்கும் என்பது குறித்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.