சொந்த ஊருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்

கொரோனா பரவல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.

Update: 2021-04-27 15:47 GMT
ஊட்டி

கொரோனா பரவல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.

வேலை இழப்பு

ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நீலகிரி மாவட்டத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். 

குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை எஸ்டேட்டுகளில் தேயிலை பறிப்பது, பராமரிப்பது, தேயிலைத்தூள் உற்பத்தி செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். 

மேலும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள், சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கும் விடுதிகள், பெரிய உணவகங்களில் அவர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். 

சுற்றுலா பயணிகள் இல்லாததால் அறைகள் நிரம்புவது இல்லை. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. 

இதனால் தங்கும் விடுதிகள், உணவகங்களில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். 

வடமாநில தொழிலாளர்கள்

அதுபோன்று கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் காத்திருந்து பஸ்கள் மூலம் கோவை சென்று பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் தங்கி இருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தோம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. வருமானம் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்