நகைக்காக தனியார் நிறுவன மேலாளர் கொலையா?
நகைக்காக தனியார் நிறுவன மேலாளர் கொலையா?
சரவணம்பட்டி
கோவை அருகே நகைக்காக தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன மேலாளர்
கோவை சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் ரோடு பாத்திமா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த 24-ந் தேதி ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்தவரின் பேண்ட் பையில் 2 செல்போன்களும், கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்ததற்கான அடையாள அட்டையும் இருந்துள்ளது.
போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர், சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பாலதண்டாயுதபாணி என்பவரது மகன் சாய்நாத் (48) என்பதும், இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகளும் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சாய்நாத்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீ சார் கொடுத்த தகவலின் பேரில், சாய்நாத்தின் குடும்பத்தினர் கோவைக்கு விரைந்து வந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.
மோதிரம், சங்கிலி மாயம்
பிரேத பரிசோதனை அறிக்கையில் சாய்நாத்தின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால் இறந்தது தெரிய வந்தது.
இதனால் அவர், கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதா? அல்லது யாராவது தாக்கியதில் காயம் ஏற்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாய்நாத் கழுத்தில் 3 பவுன் தங்க சங்கிலியும், கைவிரலில் வைர மோதிரமும் அணிந்திருந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
எனவே அவருடன் அறையில் வேறு யாரும் தங்கி இருந்தார்களா?, நகைக்காக வேறு யாராவது சாய்நாத்தை அடித்து கொலை செய்தார் களா?. அவருடன் கடைசியாக பேசிய யார்? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.