தேனி மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்பட 214 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்பட 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.;
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையாக உருவெடுத்து வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை வைரஸ் பரவல் விகிதம் 1-ல் இருந்து 3 சதவீதமாக இருந்தது. கடந்த 25-ந்தேதி பரவல் விகிதம் 14.87 சதவீதமாக இருந்தது. நேற்று இது 18.6 சதவீதமாக உயர்ந்தது.
அதாவது 100 பேருக்கு மாதிரி எடுத்து பரிசோதனை செய்தால் அவர்களில் சுமார் 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகிறது. பரவல் விகிதம் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
214 பேருக்கு பாதிப்பு
இதற்கிடைய மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அதுபோல், மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 214 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் இது புதிய உச்சம் ஆகும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 371 ஆக உயர்ந்தது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 81 பேர் நேற்று குணமாகினர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 838 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.