கம்பம் உழவர் சந்தை மூடல் சாலைகளில் உள்ள தடுப்புகளை உடைத்து கடைகள் அமைத்த வியாபாரிகள்

கம்பம் உழவர் சந்தை மூடியதை தொடர்ந்து சாலைகளில் உள்ள தடுப்புகளை உடைத்து வியாபாரிகள் கடைகள் அமைத்தனர்.

Update: 2021-04-27 15:26 GMT
கம்பம்:
கம்பத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உழவர்சந்தையை சுற்றியுள்ள பகுதிகளான பார்க் ரோட்டில் 3 பேருக்கும், கே.வி.ஆர்.தெருவில் 7 பேருக்கும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் உழவர் சந்தை பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி சுகாதாரத்துறை நிர்வாகம் சார்பில் நான்கு புறமும் சாலையில் தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கம்பம் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து கம்பம் எல்லைப்பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் நேற்று முதல் உழவர்சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் உழவர் சந்தையில் காய்கறி கடை அமைத்திருந்தவர்கள் தொலைவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடைகள் அமைக்க ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து உழவர்சந்தை வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று உழவர்சந்தையை சுற்றி நான்கு புறமும் சாலையில் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் உழவர் சந்தையை சுற்றிலும் காய்கறி கடைகள் அமைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் கம்பம் தெற்கு போலீசார் விரைந்து வந்து விதியை மீறி கடைகள் அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தடையை மீறி மீண்டும் கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த கடைகளில் வேளாண் விற்பனை விலை பட்டியலை விட காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்