தையூர் தடுத்தான் ஈஸ்வரர் கோவில் தேரோட்டம்

செஞ்சி அருகே தையூர் தடுத்தான் ஈஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2021-04-27 14:37 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே தையூர் கிராமத்தில் தடுத்தான் ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தடுத்தான் ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் மூலவர் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி அளித்தார். 
இதைத் தொடர்ந்து ரூ.80 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்டு அலங்கரித்து தயாராக நிறுத்தி இருந்த தேரில் தையல் நாயகி உடனுறை தடுத்தான் ஈஸ்வரர் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் மத்திய அரசு கூடுதல் வக்கீல் வெங்கடேசன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்