போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2021-04-27 14:29 GMT
திண்டுக்கல்:

விசாரணை கைதி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5.4.2010 அன்று மொட்டணம்பட்டியில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரே‌‌ஷ்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, செந்தில்குமாரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து வேடசந்தூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். இதற்கிடையே செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, அவரை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதையடுத்து செந்தில்குமார் நெஞ்சுவலியில் இறந்ததாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் போலீசார் தாக்கியதில் செந்தில்குமார் உயிரிழந்ததாக கூறி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி, செந்தில்குமார் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. 

4 போலீசார் மீது வழக்குப்பதிவு

அதன்படி திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த வழக்கு விசாரணையை தொடங்கினர். அதில் செந்தில்குமாரின் உறவினர்கள் மற்றும் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதற்கிடையே செந்தில்குமார் கைது செய்யப்பட்ட போது பணியில் இருந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைமுத்துசாமி, ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம், அப்துல்வகாப் ஆகிய 4 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அப்துல்வகாப் இறந்து விட்டார்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்தார். இதில் மொத்தம் 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சி.வி.கே.ஆர்.செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். 

 10 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் மொட்டணம்பட்டி கோவிலில் இருந்து வடமதுரை போலீஸ் நிலையம் வரை செந்தில்குமார் அடித்தே அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு காயங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதை மறைக்கவும் எதிரிகள் செயல்பட்டுள்ளனர்.

எனவே, இந்திய தண்டனை சட்டம் 166 (அத்துமீறுதல்) பிரிவின்படி திருமலை முத்துசாமிக்கு ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,000 அபராதமும், 304 பிரிவின்படி (மரணத்தை ஏற்படுத்துதல்) 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
---------------

மேலும் செய்திகள்