லாரியில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து பழனிக்கு கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக துப்பாக்கி முனையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:
கஞ்சா விற்பனை
பழனி நகர், அடிவாரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பழனி இந்திராநகரை சேர்ந்த விஜய்ஆனந்த் (வயது 42) என்பவர் பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து அவர், யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்து வருகிறார் என்பது குறித்து போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.
ஆந்திராவில் இருந்து...
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு கும்பல் பழனிக்கு கஞ்சா கடத்தி வருவதும், அவர்களிடம் விஜய்ஆனந்த் கஞ்சா வாங்க இருப்பதும் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், இசக்கிராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் விஜய்ஆனந்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிகாலை விஜய்ஆனந்த் தனது காரில், பழனி இடும்பன்கோவில் பைபாஸ் சாலை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த போலீசார் மறைவான இடத்தில் பதுங்கி இருந்தனர்.
துப்பாக்கி முனையில்...
சிறிதுநேரத்தில் பைபாஸ் சாலையில் லாரி ஒன்று வந்து நின்றது. அந்த லாரியில் இருந்து இறங்கிய நபர் ஒருவர், விஜய்ஆனந்திடம் சாக்குமூட்டை ஒன்றை வழங்கினார்.
இதையடுத்து அங்கு பதுங்கி இருந்த போலீசார், அந்த கும்பலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த சாக்குமூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 4 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 5 மூட்டைகளில் இருந்து 50 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
4 பேர் கைது
இதற்கிடையே பிடிபட்டவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் தங்கவேல் (வயது 36), மதுரை வடகரையை சேர்ந்த வினோத்ராஜ் (30), சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ராஜ்குமார் (38) ஆகியோர் என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்கள் 3 பேரையும், விஜய் ஆனந்தையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி தூத்துக்குடிக்கு கொண்டு செல்லும் வழிநெடுகிலும் அந்த கும்பல் கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது.