தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 148 நுண் கட்டுப்பாட்டு மண்டலம் மூலம் கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 148 கட்டுப்பாட்டு மண்டலம் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, 148 நுண் கட்டுப்பாட்டு மண்டலம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி உள்ள சில வீடுகள் சேர்த்து நுண் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
148 மண்டலங்கள்
அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 148 நுண் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இதில் தூத்துக்குடி ஊரக வட்டாரத்தில் 4 மண்டலமும், வல்லநாடு வட்டாரத்தில் 8 மண்டலமும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மண்டலமும், ஆழ்வார்திருநகரியில் 8 மண்டலமும், திருச்செந்தூர் 5 மண்டலமும், சாத்தான்குளம் 3, கோவில்பட்டி 71, ஓட்டப்பிடாரம் 12, புதூர் 4, கயத்தாறு 16, விளாத்திகுளம் 9 ஆக மொத்தம் 148 மண்டலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மண்டலங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்துவது அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது, அந்த பகுதிகளில் தேவைப்பட்டால் தடுப்புகளை அடைத்து கண்காணிப்பது, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது போன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.