கருப்பு பணத்தை மாற்ற கமிஷன் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் 19 பவுன் நகை மோசடி சிறுமியுடன் இளம்பெண் கைது

கருப்பு பணத்தை மாற்ற கமிஷன் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் நூதன முறையில் 19 பவுன் நகை மோசடி செய்த இளம்பெண் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 17 வயது சிறுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-27 05:10 GMT
பூந்தமல்லி, 

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 32). இவர், மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (27). இவர், 17 வயது சிறுமியுடன் அடிக்கடி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து, அங்கு சவாரிக்காக காத்திருக்கும் ஆட்டோவில் பயணம் செய்வார். அப்போது தன்னை பணக்கார பெண்போல் காட்டிகொள்வார். இவ்வாறு பலமுறை அருள் என்பவரின் ஆட்டோவில் சவாரி செய்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ரேவதி, “எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். எங்களிடம் கருப்பு பணம் அதிகளவில் இருப்பதால் அதனை வெள்ளையாக மாற்றி வருகிறோம். உங்களிடம் இருக்கும் அடகு வைத்த தங்க நகைகளின் சீட்டை கொடுத்தால் நகைகளை மீட்டு தருவதுடன், உங்களுக்கு கமிஷனும் தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறினார்.

சிறுமியுடன் பெண் கைது

அதனை உண்மை என்று நம்பிய அருள், அவருக்கு பழக்கமான மற்றொரு ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் அடகு வைத்து இருந்த 19 பவுன் நகைகளுக்கான ரசீதை வாங்கி கொடுத்தார். ஆனால் அதன்பிறகு ரேவதி, அருளிடம் செல்போனில் பேசாமலும், நகை, பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் கதிர், இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து ரேவதி மற்றும் அவருக்கு உதவிய 17 வயது சிறுமி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.

நூதன மோசடி

போலீசாரிடம் ரேவதி கூறும்போது, “பணம் வேண்டும் என்று கேட்டால் யாரும் கொடுக்க மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று கூறி நகை அடகு வைத்த ரசீதை வாங்குவேன். பின்னர் அந்த நகையை மீட்டு, கூடுதல் விலைக்கு அதை விற்று விடுவேன். எனக்கு செல்போனை அதிகமாக பயன்படுத்த தெரியாது என்பதால் 17 வயது சிறுமியை என்னுடன் உதவிக்கு வைத்து கொண்டு நூதன மோசடிக்கு பயன்படுத்திக்கொண்டேன்” என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் இதுபோல் வேறு எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்