பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு போரூர் ஏரியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, போரூர் ஏரியில் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Update: 2021-04-27 04:46 GMT
சென்னை, 

சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே உள்ள போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள், கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பயன்படுத்திய முழு உடல் கவசம், ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்பட்ட ‘பெட்ஷீட்' உள்பட பல்வேறு மருத்துவ கழிவுகள், தீங்கு விளைவிக்கும் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியின் அருகே உள்ள மதுரம் நகரை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் கொடுத்தனர்.

“தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் குடியிருப்பு வாசிகள் புகார் கொடுக்கும்போது, குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுகின்றன. ஆனாலும் குப்பைகள் கொட்டுவது தொடர்ந்து வருகிறது” என மதுரம் நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் துணை தலைவர் வி.பட்டாபிராமன் தெரிவித்தார். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது மதுரம் நகர் குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான சிரமத்தையும், அதிருப்தியையும் கொடுப்பதாக அமைந்துள்ளது.

காற்றில் பறக்கும் உத்தரவு

இந்த விவகாரத்தை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும், சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடுக்கவேண்டும் என்றும், குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் நுண் உரம் செயலாக்க மையம் ஒன்றை நிறுவவேண்டும் என்றும் குன்றத்தூர் வட்ட வளர்ச்சி அதிகாரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நுண் உரம் செயலாக்க மையத்துக்கான பணிகள் நிறைவடைந்தபோதிலும், அது பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படவில்லை என்பது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த கூட்டுக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிடும் விதமாக போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கதவுகளை தட்டவேண்டிய நிலைக்கு மதுரம் நகர் குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ‘குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் இருந்து ஏற்கனவே 1.2 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி ஊழியர்கள் வீட்டுக்கே சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டத்துக்கும், அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததே குப்பைகள் குவிவதற்கு காரணம்' என்றும் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்