விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் பயிர்களுடன் போராட்டம்
விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் பயிர்களுடன் போராட்டம்.;
நல்லம்பள்ளி,
நல்லம்பள்ளி அருகே ஜீவாநகர், ஜாகிரி, வெத்தலக்காரன்பள்ளம், சொரக்கையன்கொள்ளை கிராமங்களில் மஞ்சள், நெல், பட்டுப்பூச்சி செடிகள், தென்னை, வாழை, ராகி, சோளம், கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த 4 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை சிப்காட் பணிக்கு கையகப்படுத்துவதற்காக நேற்று சிப்காட் தனிப்பிரிவு அலுவலர்கள், சர்வேயர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் உள்ள இடங்களையும், வீடுகளையும் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து வாழை, பட்டுப்பூச்சி செடிகள், நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுடன் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.