வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன.

Update: 2021-04-27 02:59 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன.

புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அனைத்து சலூன்களும் மூடப்பட்டன. 

அழகு நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. ஊட்டி மாரியம்மன் கோவில், வேணுகோபால சுவாமி கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், எல்க்ஹில் முருகன் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.

கோவில்கள் மூடல்

ஊட்டி மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உள்ளே செல்ல முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோவில்கள் மூடப்பட்டாலும், பூசாரிகள் மூலம் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை நடைபெறும்.

இதேபோல் ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம், புனித தாமஸ் ஆலயம் போன்ற ஆலயங்கள் மூடப்பட்டன. அங்கு பிரார்த்தனைக்கு மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நீலகிரியை பொருத்தவரை பெரிய வணிக வளாகங்கள் இல்லை. 

சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லாததால், ஊட்டியில் அசெம்பிளி தியேட்டர் உள்பட 2 தியேட்டர்கள் மூடப்பட்டது. அங்கு மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. மதுக்கூடங்கள் திறந்து இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இ-பதிவு தொடர்கிறது

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல மற்ற கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

 மேலும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை தொடர்கிறது. கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தினமும் நடைபெறக்கூடிய பூஜைகள், ஆராதனைகள் மட்டும் நடைபெற்றது. 

ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோவில்கள், பள்ளிவாசல்களின் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு இருந்தது. கூடலூர் நகரில் உள்ள மேல் கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் கோவில், ஸ்ரீ சக்தி விநாயகர், சக்தி முனீஸ்வரன், நந்தட்டி சிவன், மங்குழி பகவதி அம்மன், நம்பாலக்கோட்டை சிவன்மலை உள்ளிட்ட கோவில்களின் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்