காலாண்டு வரியை ரத்து செய்யக்கோரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
சுற்றுலா வாகனங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யக்கோரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
ஊட்டி
சுற்றுலா வாகனங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யக்கோரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
வேலை நிறுத்த போராட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் நீலகிரியில் சுற்றுலா வாகனங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன டிரைவர்கள் ஊட்டியில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் சுற்றுலா வாகன டிரைவர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் அங்கு சமூக இடைவெளி விட்டு நின்றனர்.
முழுமையாக ரத்து
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு காரணம், அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை ஆட்டோக்களில் அழைத்து செல்கின்றனர்.
கிராமப்புற பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் சென்று வருகிறது. சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. இது தவிர மீண்டும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கொண்டு இருக்கிறோம். எனவே சுற்றுலா வாகனங்கள் மீதான காலாண்டு வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.