மின்னல் வேகத்தில் பரவும் தொற்றால் மக்கள் அச்சம்: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா- 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் தொற்று காரணமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும், 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-04-27 01:19 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் தொற்று காரணமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும், 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
515 பேர்
கொரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாக பரவுவது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு திணறி வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு தினமும் பாதிக்கப்பட்டார்கள். நேற்று ஒரே நாளில் 515 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் அச்சமடைந்து உள்ளார்கள்.
சிகிச்சை
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக தொற்று ஏற்படும் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 2 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்மூலமாக தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. தற்போது வரை 2 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
2 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 404 ஆக உயர்ந்து உள்ளது. அதில் 16 ஆயிரத்து 765 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 239 பேர் குணமடைந்தனர்.
இதற்கிடையே கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் பவானியை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த 19-ந் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி உயிரிழந்தார்.
இதேபோல் அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கொரோனா தொற்று காரணமாக கடந்த 24-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்