பெருந்துறையில் பரபரப்பு அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்- பணிப்பெண் அடுத்தடுத்து திடீர் சாவு; கொரோனாவால் இறப்பா? போலீசார் விசாரணை
பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் மற்றும் அவருடைய வீட்டில் வேலை செய்த பணிப்பெண் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கொரோனா காரணமாக பணிப்பெண் இறந்தாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பெருந்துறை
பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் மற்றும் அவருடைய வீட்டில் வேலை செய்த பணிப்பெண் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கொரோனா காரணமாக பணிப்பெண் இறந்தாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பெண் டாக்டர்
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 57 வயது பெண் ஒருவர் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர்களுக்கான குடியிருப்பில் தங்கி இருந்தார். இவருடைய வீட்டில் சமையல் மற்றும் இதர வேலைகளை பெருந்துறை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த 55 வயது பெண் செய்து வந்தார்.
உடல் நலக்குறைவு
இந்த நிலையில் அந்த பெண் டாக்டருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே அந்த டாக்டரின் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணுக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பெருந்துறையை அடுத்த நசியனூரில் வசித்து வந்த அந்த பணிப்பெண்ணின் சகோதரர், விரைந்து சென்றார்.
சாவு
பின்னர் நேற்று முன்தினம் அந்த பணிப்பெண்ணை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது அந்தப்பணி பெண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பணிப்பெண்ணுக்கு ஈ.சி.ஜி. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பரிசோதனை முடிந்த சிறிது நேரத்தில் அந்த பணிப்பெண் திடீரென இறந்தார்.
பரபரப்பு
இதுகுறித்து அந்த பணிப்பெண்ணின் சகோதரர், பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘என்னுடைய சகோதரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து இருக்கலாம். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பணிப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் டாக்டரும் பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.
பெருந்துறையில் அரசு பெண் டாக்டரும், அவருடைய வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணும் அடுத்தடுத்து திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.