விவசாய விளைபொருள் சேமிப்பு கிடங்கிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளர் கைது-லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
விவசாய விளைபொருள் சேமிப்பு கிடங்கிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஓமலூர்:
விவசாய விளைபொருள் சேமிப்பு கிடங்கிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேமிப்பு கிடங்கு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டி தெற்கத்தியான் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அங்கு அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு கட்ட முடிவுசெய்து பணியை தொடங்கினார். அப்போது தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்காக தனது தந்தை பச்சியப்பன் பெயரில் ரூ.3 ஆயிரத்தை செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்தார்.
லஞ்சம்
இந்த நிலையில் காடையாம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வரும் நடுப்பட்டி தளவாய்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் (49) என்பவர் இடத்தை பார்வையிட சென்றார். அப்போது அவர் பிரபுவிடம் தனக்கு ரூ.7 ஆயிரம் வேண்டும் என்றும், மேலும் கம்பம் நடுவதற்கு ரூ.16 ஆயிரத்து 470 ஆகும் எனக்கூறியுள்ளார். மேலும் தொகையுடன் அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறி உள்ளார். இதையடுத்து தனக்கு லஞ்சமாக ரூ.5 ஆயிரமும், கம்பம் நடுவதற்கு ரூ.16 ஆயிரத்து 470-ம் எடுத்துக்கொண்டு அலுவலகம் வரும்படி கூறி உள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு இது பற்றி நேற்று முன்தினம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
கைது
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய பணம் ரூ.5 ஆயிரத்தை நேற்று காலை அலுவலகம் சென்று பிரபு மின்வாரிய வணிக உதவியாளர் சுந்தரராஜனிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரராஜனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.