கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்: சேலத்தில் கோவில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன
கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் சேலத்தில் கோவில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
சேலம்:
கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் சேலத்தில் கோவில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனாவின் 2-வது அலை பரவல் அனைவரையும் பயம் கொள்ள செய்திருக்கிறது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடிக்காததின் எதிரொலியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனா பாதிப்பு மிகுதியாகி கொண்டே வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையில் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகளை கடந்த 24-ந் தேதி அரசு அறிவித்திருந்தது.
ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் அமல்
அதன்படி தமிழகத்தில் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்), கேளிக்கை விடுதிகள், மதுக்கடை ‘பார்’கள், பெரிய அரங்குகள், கூட்டரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பெரிய கடைகள், மால்கள் மற்றும் வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல சலூன் கடைகள், அழகு நிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
முக்கியமாக கோவில்கள் நேற்று முதல் அடைக்கப்பட்டன. கோவில்கள் அடைக்கப்பட்டாலும் பூஜை உள்ளிட்ட தினசரி நடக்கும் நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. கோவில்கள் அடைக்கப்பட்டதால் வாசல்களில் நின்றே கற்பூரம் காட்டி பொதுமக்கள் இறைவனை வழிபட்டு சென்றனர். அதேபோல தேவாலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் அனைத்துமே மூடப்பட்டன.
அதேபோல கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்களும் மூடப்பட்டன. மேலும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் சேராதவாறும், நின்று கொண்டு பயணிக்காதவாறு டிரைவர்கள்-கண்டக்டர்கள் பார்த்துக்கொண்டனர்.
காய்கறி-மளிகை கடைகள்
அதேவேளை காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள், அங்காடிகள் குளிர்சாதன வசதிகள் இன்றி செயல்பட்டன. சமூக இடைவெளியில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல கடைக்காரர்கள் அறிவுறுத்தினர்.
அதேவேளை வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை கடைகள், காய்கறி கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தவகையில் தனியாக செயல்படும் மளிகை உள்பட பலசரக்கு கடைகள் மட்டுமே இயங்க அனுமதி தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம்
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் கோவில்களுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்றது.
பக்தர்கள் கோவிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்ததை காணமுடிந்தது. பூசாரிகள் மட்டும் கோவிலுக்குள் இருந்தனர். 4 ரோடு அருகே குழந்தை ஏசு பேராலயம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தியேட்டர்-சலூன் கடைகள்
அதேபோல், மாநகரில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குகை உள்ளிட்ட பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்களில் வேலை செய்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும். உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் உடற்பயிற்சிக்காக வந்த சிலர், ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒருசிலர் தங்களது வீடுகளிலேயே உடற்பயிற்சி செய்தனர். சலூன் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
சேலம் 5 ரோடு, ராமகிருஷ்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. நேற்று முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலம் மற்றும் சடங்குகளில் 25 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபங்களுக்கு சென்று கட்டுப்பாடு விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் நேற்று புதிய பஸ் நிலையத்துக்கு முழு ஊரடங்குக்கு பிறகு ஏராளமான பஸ்கள் வந்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.
இ-பாஸ் கட்டாயம்
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள வெளி மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நேற்று உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க ஏராளமானோர் வந்தனர். இதனால் உழவர் சந்தைகள் மற்றும் கடைவீதி மற்றும் தினசரி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மளிகை கடைகளிலும் அதிகளவில் வியாபாரம் நடைபெற்றது. அதே போல சேலம் மாநகர் உள்பட மாவட்டத்தில் நகை கடைகள் நேற்று திறந்து இருந்தன.