ஈரோட்டில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் பறிமுதல்
ஈரோட்டில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்புலன்சை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு தனியார் ஆம்புலன்சை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் ஆம்புலன்சை நிறுத்தாமல் அதன் டிரைவர் ஓட்டிச்சென்றார். அந்த ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லாததை அறிந்த போலீசார் அந்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று நிறுத்தினார்கள்.
அப்போது நடத்திய விசாரணையில், ஆம்புலன்சை ஓட்டி வந்தவர் ஜீவானந்தன் (வயது 23) என்பதும், ஆம்புலன்சின் உரிமையாளர் கார்த்திகேயன் (39) என்பதும் தெரியவந்தது. கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு நோயாளியை அழைத்து வர சென்றதாக டிரைவர் கூறிய தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது தவறான தகவல் என்பது தெரியவந்தது. மேலும், அந்த ஆம்புலன்சுக்கு தகுதி சான்று இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிரைவர் ஜீவானந்தம், உரிமையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆம்புலன்சை பறிமுதல் செய்தனர்.