மினி லாரி கவிழ்ந்து விபத்து: சிறுமி உள்பட 3 பேர் சாவு
சித்ரதுர்கா அருகே, மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 பெண்கள் இறந்த சம்பவம் நடந்து உள்ளது.
சிக்கமகளூரு: சித்ரதுர்கா அருகே, மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 பெண்கள் இறந்த சம்பவம் நடந்து உள்ளது.
3 பெண்கள் சாவு
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் டவுன் பகுதியில் நேற்று காலை ஒரு மினி லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மினி லாரியில் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.
அப்போது சிறுமி உள்பட 3 பெண்கள் இறந்தது தெரியவந்தது. டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இந்த விபத்து குறித்து அறிந்த இரியூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் இரியூரை சேர்ந்த செல்வி(வயது 35), தீபிகா(6), நீலம்மா(29) என்பது தெரியவந்தது. இவர்கள் கட்டிட வேலைக்கு சென்ற போது இந்த விபத்து நடந்ததும் தெரிந்தது. இதுகுறித்து இரியூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் இறந்த சம்பவம் இரியூரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.