பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை; கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-04-26 20:17 GMT
நாங்குநேரி. ஏப்:
பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதி கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகன் முத்து மனோ (வயது 27). இவர் கடந்த 22-ந் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் சில கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 
இதையடுத்து முத்து மனோவின் கொலைக்கு காரணமானவர்கள் மற்றும் சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சாவுக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

2-வது நாளாக... 

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வாகைகுளத்தில் முத்து மனோவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'சி.பி.சி.ஐ.டி. மீது நம்பிக்கையின்மை நிலவுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தை போல இந்த வழக்கையும் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை முத்து மனோவின் உடலை பெறப்போவதில்லை. தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர். 

போராட்டத்தில் பருத்திகோட்டை நாட்டார் கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம், செயலாளர் பாலசுப்பிரமணியம், தேவேந்திரகுல கூட்டமைப்பு பார்வதி சண்முகசாமி, மூவேந்தர் புலிப்படை பாஸ்கர், கருஞ்சிறுத்தைகள் இயக்க தலைவர் அதிசய பாண்டியன், மள்ளர் பேராயம் சுபாஷினி, மள்ளர் தொழில் வர்த்தக சம்மேளன இணைச்செயலாளர் அரவிந்தன், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர்குல மக்கள் சபை நிறுவனர் ராமர் பாண்டியன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்