மஞ்சள் நிறத்தில் மாநகராட்சி குடிநீர்

மதுரை பகுதியில் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது

Update: 2021-04-26 20:15 GMT
மதுரை
மதுரை ஆரப்பாளையம், பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்த குடிநீர் கடும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும், இந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்ததற்கான அடையாளமாக வரும் குளோரின் வாசனையும் காணப்படவில்லை. இத்துடன், தண்ணீைர பாத்திரங்களில் பிடித்து வைத்த ஒரு சில மணி நேரங்களில் பாத்திரத்தின் அடியில் இரும்பு தாது போன்ற வண்டல் படிகிறது.
இந்த வண்டல் படிவம் நுரை போன்ற தன்மையுடன் மேலும் தண்ணீரில் பரவும் தன்மையுடன் காணப்படுகிறது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படிவம் கலந்த தண்ணீரை குடிக்க பயந்து இந்த பகுதி மக்கள் பலரும் தினமும் பணம் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கி அருந்தி வருகின்றனர். இது குறித்து, மாநகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறுகின்றனர்.
இதுபற்றி ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் அணைப்பட்டி பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. பொதுவாக, இதுபோன்ற சுத்திகரிப்பு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் தெரிந்த நிபுணர்களை பணியில் அமர்த்த வேண்டும். ஆனால், அதுபோல யாரும் இங்கு பணியில் அமர்த்தப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதனால் தான், முறையாக தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் வருகிறது என்ற சந்தேகம் எழுகிறது"என்றார்.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் கூறுகையில், "இந்த பகுதி சாதாரண மக்கள் வாழும் பகுதியாகும். தினமும் பணம் கொடுத்து தண்ணீரை வாங்க இங்குள்ள மக்களால் முடியாது. விரைவில் சுத்தமான தண்ணீரை வழங்காவிட்டால் போராட்டத்தில் இறங்கவுள்ளோம்" என்றனர்.

மேலும் செய்திகள்