மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
பேரையூர் அருகே மணல் அள்ளிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது;
பேரையூர்
பேரையூர் அருகே மணல் அள்ளிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பறிமுதல்
பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி எத்திலாமலை அருகே உள்ள கள்ளாங்குத்து ஓடையில் மணல் திருடப்படுவதாக விட்டல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தங்க முனியம்மாளுக்கு கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது ஓடையில் 7 டிராக்டர்கள் மற்றும் எந்திரம் ஆகியவற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். வருவாய் துறையினர் மற்றும் போலீசாரை பார்த்தவுடன் மணல் அள்ளியவர்கள் டிராக்டர்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பின்னர் அங்கிருந்த எந்திரம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து கொண்டு வரும்போது மணல் அள்ளியவர்கள் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியதாக தெரிகிறது.
வழக்கு
மேலும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்தனராம். பின்னர் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் எந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி சாப்டூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்க முனியம்மாள் சாப்டூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் அணைக்கரைபட்டியைச் சேர்ந்த ராஜகுரு, செந்தமிழ், முத்து, வெங்கடேசன் உள்பட 24 பேர் மீது சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.