கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் கர்நாடகத்தில் 2 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்
கர்நாடகத்தில் 2 ஆயிரம் ஜோடிகள் திருமணம்
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கு நேரத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. அதாவது 50 பேருக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா ஊரடங்கிற்கு மத்தியிலும் கா்நாடகத்தில் 2 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் இணைந்துள்ளனர்.
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் அதிகப்படியாக 700-க்கும் மேற்பட்ட ஜோடிகள் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டு இருந்தார்கள். அதாவது தட்சிண கன்னடாவில் 372 ஜோடிகளும், உடுப்பியில் 354 ஜோடிகளும் திருமணம் செய்து கொண்டு இருந்தனர். இதற்கு அடுத்த படியாக சிக்கமகளூருவில் 179 ஜோடிகளும், சித்ரதுர்காவில் 144 ஜோடிகளும், உத்தரகன்னடாவில் 132 ஜோடிகளும் ஊரடங்குக்கு மத்தியில் இல்லறத்தில் இணைந்திருந்தனர்.