நாமக்கல் அருகே காலாவதியான மருந்து பாட்டில்கள் குவியலால் பரபரப்பு
நாமக்கல் அருகே காலாவதியான மருந்து பாட்டில்கள் குவியலால் பரபரப்பு ஏற்பட்டது.
மோகனூர்:
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டியில் ஒரு காட்டு பகுதியில் உயிர்காக்கும் மருந்துகள், 2019-ம் ஆண்டு காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரைகள் வீசப்பட்டு கிடந்தன. சாலையில் சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எந்த ஒரு அரசு அலுவலர்களோ, சம்பந்தபட்ட துறையினரோ சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறும் போது மருந்து, மாத்திரை, ஊசிகள் கொட்டப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்த வேண்டும். கால்நடைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், பாதிப்பு வரும் முன் அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார்கள். காலாவதியான மருந்து பாட்டில்கள் சாலையோரம் உள்ள காட்டுப்பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.