தென்காசியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைப்பு

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டன.;

Update: 2021-04-26 19:47 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டன. இதனால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவில்கள் அடைப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு இரவு மட்டும் ஊரடங்கு பிறப்பித்தது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் அடைக்க உத்தரவிட்டது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில், சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில், கடையம் வில்வவனநாதர் சுவாமி கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டன.

பக்தர்களுக்கு அனுமதி ரத்து

கோவில்களில் கால பூஜைகள் மட்டும் நடத்தலாம் என்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோவில்களில் பக்தர்கள் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று மசூதிகளிலும் யாரும் தொழுகைக்கு செல்லவில்லை. நோன்பு நேரம் என்பதால் அவரவர் வீடுகளிலேயே தொழுதனர்.
மேலும் சி.எஸ்.ஐ., ஆர்.சி. உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்