திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட மேலும் 199 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட ஒரேநாளில் 199 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.;
திண்டுக்கல்:
சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், துணை ராணுவத்தினர், போலீசார் என 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பீகார் மாநிலத்தில் இருந்து வந்த மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மேலும் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்த்து நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 62 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 187 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் நேற்றைய நிலவரப்படி 1,585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.