திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் சாலை பணியாளர் பலி மனைவி படுகாயம் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாலை பணியாளர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். பலியானவர்களின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-26 19:18 GMT
திருச்சிற்றம்பலம்:-

திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாலை பணியாளர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். பலியானவர்களின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சாலை பணியாளர்

புதுக்கோட்டை மாவட்டம் புள்ளான்விடுதி கிராமம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் புண்ணியநாதன் (வயது 45). இவர், சாலை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஷோபனா(35). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 
நேற்று புண்ணியநாதனும், அவருடைய மனைவி ஷோபனாவும்  உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்று விட்டு தஞ்சை மாவட்டம் செருவாவிடுதி கடைவீதியில் இருந்து திருச்சிற்றம்பலம் கடைவீதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

கார் மோதி பலி

திருச்சிற்றம்பலம் அருகே சித்துக்காடு பிரிவு சாலை பகுதியில் சென்றபோது பட்டுக்கோட்டையில் இருந்து வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி நின்றது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற புண்ணியநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான புண்ணியநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி படுகாயம் 

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அவருடைய மனைவி ஷோபனாவை ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புண்ணியநாதனின் உறவினர்கள் திருச்சிற்றம்பலம்-செருவாவிடுதி சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதை அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், தாசில்தார் தரணிகா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், அனிதா கிரேசி ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. 
விபத்து தொடர்பாக திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமானவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்