சாலையில் சிதறிய ரேஷன்அரிசி மூடைகள்

திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து சாலையில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன.

Update: 2021-04-26 18:31 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருந்து மதுரையை நோக்கி ஒரு சரக்கு வாகனம் சென்றது. அந்த வாகனத்தை திருப்புவனத்தை அடுத்த பாப்பன்குளம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த சாலையில் அரிசி மூடைகள் சிதறி விழுந்தன. அந்த வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் மதுரை காமராஜர் காலனியை சேர்ந்த சங்கரபாண்டியன்(வயது 24) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உடனே அவர் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி அரிசி மூடைகளை ஏற்ற முயன்றார். விபத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த மூடையில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர். இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த உணவு கடத்தல் பிரிவு போலீசார் 40 ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றி அரசு குடோனில் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக திருப்புவனம் போலீசார் ஒரு வழக்கும், ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிவகங்கை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றொரு வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்