கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
சீர்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல்சூளை தொழிலாளி சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை கலெடர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் 2 அணிகளாக பிரிந்து நடைபெற்றது.
மயிலாடுதுறை;
சீர்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல்சூளை தொழிலாளி சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை கலெடர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் 2 அணிகளாக பிரிந்து நடைபெற்றது.
கொலை வழக்கு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் செங்கல் சூளை தொழிலாளி சீனிவாசன் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன் தலைமையில் அக்கட்சியினர் மயிலாடுதுறை நகர பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பட்டமங்கலத்தெரு, சின்னக்கடை வீதி வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்திலிருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் கச்சேரி ரோடு, பட்டமங்கலத்தெரு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களும் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இறுதி முடிவு
இரு தரப்பினர் தனித்தனியாக சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரிடமும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரு தரப்பிலும் தலா 5 பேர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி இருதரப்பை சேர்ந்த 10 பேர் போலீசார் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது நாளை (புதன் கிழமை) அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 3.30 மணிக்கு முடிந்தது. 3½ மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.