கரூர் மாவட்டத்தில் ஒருநாளைக்கு 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் ஒருநாளைக்கு 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கலெக்டர் கூறினார்.

Update: 2021-04-26 17:50 GMT
கரூர்
ஆய்வுக்கூட்டம்
கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்றால் ஒரு தெருவில் 2-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டாலே அப்பகுதியினை கட்டுப்பாடுமிக்க பகுதியாக அறிவித்து தெருவின் இருபுறங்களிலும் போக்குவரத்து இல்லாத வகையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
சிறப்பு சிசிக்சை மையங்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதி, சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா? என கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும். 
ஒருநாளைக்கு சுமார் 1,000 முதல் 1,500 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட வேண்டும். நிலைமையின் தீவிரத்திற்கு ஏற்ப எண்ணிக்கையினை அதிகப்படுத்தலாம். கொரோனா தொற்றுக்கான சிறப்பு சிசிக்சை மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறைகளாவது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டு பேசவேண்டும்.
நடவடிக்கை
வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்படாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் கடந்த 23-ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் 1,606 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 59 ஆயிரத்து 789 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
வீட்டை விட்டு வெளியில் பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது சோப்புபோட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 இவ்வாறு அவர் தெரிவித்தார். 
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானக்கண்பிரேம் நிவாஸ், துணை இயக்குனர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்