சேத்தியாத்தோப்பு அருகே அரசு பள்ளியில் திருட்டு மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சேத்தியாத்தோப்பு அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-26 17:28 GMT
சேத்தியாத்தோப்பு, 


சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது எறும்பூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவர் உள்ளார். கடந்த 23-ந்தேதி மாலையில் பள்ளியை பூட்டிவிட்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். 

 2 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று காலை 9 மணிக்கு உதவியாளர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை திறந்தார். அப்போது, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோக்கள் திறந்து கிடந்தன.

திருட்டு

இதுபற்றி அறிந்த தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் சேத்தியாத்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், ‌ சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

அதில் அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், 3 மடிக்கணினிகள் மற்றும் ரூ.24 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் வந்து சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை கைப்பற்றியதுடன், கைரேகைகளையும் பதிவு செய்து சென்றனர். 

மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த மோப்பநாய் விருத்தாசலம் சாலை வரை ஓடி சென்று நின்றது.

வலைவீச்சு

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளியில் கைவரிசை காட்டி சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்