கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்: சினிமா தியேட்டர்கள், சலூன் கடைகள் அடைப்பு

கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள், சலூன் கடைகள் மூடப்பட்டன.;

Update: 2021-04-26 17:24 GMT

கடலூர், 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது.

இந்த கட்டுப்பாடுகள் நேற்று அதிகாலை 4 மணிக்கு அமலுக்கு வந்தது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாட்டின் படி 50-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டன. 

சில தியேட்டர்களில் இது பற்றிய அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே தியேட்டர் தொழில் நலிவடைந்து வந்த நிலையில் தற்போது உள்ள ஊரடங்கால் அதை நம்பிய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

சலூன் கடைகள்

இது தவிர உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் அடைக்கப்பட்டன. நகராட்சி பகுதியில் உள்ள சலூன் கடைகளும் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் காலை 10 மணி வரை திறந்து இருந்தது. அதன்பிறகு அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. அழகு நிலையங்கள் திறந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

ஓட்டல்கள், தேநீர் கடைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டதால், அதை வாங்கிய பொதுமக்கள் சாலையோரங்களிலும், மரத்தடியிலும் அமர்ந்து சாப்பிட்டதை பார்க்க முடிந்தது.

வெளிமாநிலங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வர இ-பாஸ் முறை நடைமுறைக்கு வந்தது. அப்படி வந்தவர்களை சுகாதாரத்துறையினர் தீவிர சோதனைக்‌கு பிறகே அனுமதித்தனர்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 27 சலூன் கடை மூடப்பட்டு இருந்தது. ஆனால் அருகில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சலூன் கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. அங்கு முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் கடைக்கு வந்தவர்கள் அனைவரும் முககவசம் அணிந்த படி இருந்தனர். 

மேலும் செய்திகள்