பயணிகளை ஏற்றி வந்ததால் 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
விழுப்புரம், அரகண்டநல்லூரில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளை ஏற்றி வந்த 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா விதி மீறிய கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாகர்ஷா வீதி, எம்.ஜி. சாலை, காமராஜர் வீதி மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கடைவீதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை நடந்தே சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் இயங்கிய அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையை ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.
வியாபாரிகள் மீது வழக்கு
கடைவீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையினை ஆக்கிரமித்து இயங்கி வரும் கடைகளை உடனடியாக நகராட்சி மைதானத்திற்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தினார். அதையும் மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறி 3 பயணிகளுக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் கலெக்டர் அபராதம் விதித்தார்.
2 பஸ்களுக்கு அபராதம்
பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பஸ்சிலும், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சிலும் சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் இருக்கைகளுக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி வந்ததை கண்டுபிடித்த கலெக்டர், அந்த 2 பஸ்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த பணத்தை உடனடியாக வசூலிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
சரக்கு வாகனங்கள் பறிமுதல்
இதைத் தொடர்ந்து அரகண்டநல்லூரில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, 2 சரக்கு வாகனங்களில் பயணிகள் வந்தனர். உடனே அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். 2 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.