வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம்
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்று பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
பொள்ளாச்சி
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்று பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- வாக்கு எண்ணிக்கை காலை 7.45 மணிக்கு தொடங்கப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பொள்ளாச்சி தொகுதியில் 1,104 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெறும்.
கொரோனா பாதிப்பு
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மேஜைக்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகள் குறித்த விவரம் நகல் எடுத்து கொடுக்கப்படும்.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வெளியில் செல்லும் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளியை கடைபிடிப்பதுடன் அடிக்கடி கைகளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். தேவை யில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
பரிசோதனை கட்டாயம்
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக வருகிற 29-ந்தேதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும்.
இதில் முகவர்கள், மண்டல அலுவலர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப் பட்டால், அதற்கு மாற்று நபர் அனுமதிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.