2 தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைப்பு
திண்டிவனத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வருவாய்த்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒன்று சேர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், சப்-கலெக்டர் அனு ஆகியோர் நேற்று திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனைகள், கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா?, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது திண்டிவனம் பாரதி வீதியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனர்.
மருத்துவமனைகளுக்கு ‘சீல்’
இதையடுத்து 2 தனியார் மருத்துவமனைகளையும் மூடி ‘சீல்’ வைக்க கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங். உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அந்த 2 தனியார் மருத்துவமனைகளையும் மூடி ‘சீல்’ வைத்தனர். இதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ராஜாஜி வீதியில் உள்ள ஒரு நடன கலைக்கூடமும் சீல் வைக்கப்பட்டது. அப்போது திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.