உடன்குடியில் பதநீர், கருப்புக்கட்டி சீசன் களைகட்டியுள்ளது.

உடன்குடி பகுதியில் பதநீர், கருப்புக்கட்டி சீசன் களை கட்டியுள்ளது.

Update: 2021-04-26 14:18 GMT
உடன்குடி:
சீசன் களைகட்டி இருப்பதால், உடன்குடி பதநீர், கருப்புக்கட்டி உற்பத்தி அதிகரித்துள்ளது. இவை தினமும் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சீசன் களைகட்டியது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பதநீர்,  கருப்புக்கட்டிக்கு தனி சிறப்பு உண்டு. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம்,  உடன்குடி கருப்புக்கட்டி கிடைக்கும். இங்கிருந்து கருப்புக்கட்டியை வாங்கி சென்று, அந்தந்த பகுதிகளில் தமிழர்கள் நடத்தும் கடைகளிலும், சிலர் தனிஇடங்களில் வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது உடன்குடி பகுதியில் பனைமரங்களில் பதநீர் உற்பத்தி அதிகரித்து, சீசன் களை கட்டியுள்ளது.
பதநீர் விற்பனை
இதை தொடர்ந்து உடன்குடி பகுதியிலுள்ள முக்கிய சாலைகளில் மண்பானைகளில் வைத்து பதநீர் விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. தினமும் ஏராளமானோர் பதநீரை ஆர்வத்துடன் வாங்கி அருந்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கருப்புக்கட்டி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் உடன்குடி இருந்து  சென்னை, கோவை, திருச்சி, மதுரை, மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு காலையில் புறப்பட்டு செல்லும் ஆம்னி பஸ்களில் ஏராளமான பயணிகள்  பதநீர், கருப்புக்கட்டியை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். 
தனிச்சுவைக்கு காரணம்?
பதநீர் ஓரிரு நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு கூடுதலாக சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது. மேலும், உடன்குடி சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்களும் உடன்குடிக்கு வந்து, பதநீரையும், கருப்புக்கட்டியை வாங்கிச் செல்கின்றனர். கடலில் உள்ள வெள்ளை நிற சுண்ணாம்பு சுப்பியை, அதை எரித்து, அந்த சுண்ணாம்பு மட்டும் பதநீரில் கலப்பது உடன்குடி பகுதியில் மட்டும் தான் என்றும் அதனால் தான் உடன்குடி கருப்புக்கட்டிக்கு தனிச்சுவை என உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்