வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை. இன்றும், நாளையும் நடக்கிறது
வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை;
ராணிப்பேட்டை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுப உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பொது முகவர் மற்றும் வேட்பாளர் அனைவரும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றும், நாளையும் (செவ்வாய், புதன்கிழமை) இரண்டு நாட்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரிசோதனை மையத்தில் எவ்வித கட்டணமுமின்றி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்று பெற வேண்டும். அல்லது வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள் மற்றும் அனைத்து முகவர்கள் முதல் கட்ட தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவரது பொது முகவர், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடித்து நோய் தொற்று அதிகம் பரவாத வகையில் செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.