விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர் கைது
விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:
கம்பம் நந்தனார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). விவசாயி. இவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனது. இது குறித்து லோகநாதன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கம்பம் அரசு மருத்துவமனை அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் நடந்து வந்த வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (24) என்பதும், லோகநாதன் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.