கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வழங்கும்படி கண்ணீர் விட்டு கதறிய மகன் கலபுரகியில் சம்பவம்

கலபுரகியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை பெற, படுக்கை வழங்கும்படி மகன் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2021-04-26 12:01 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை தொடுகிறது. இதனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு படுக்கைகள் ஒதுக்கி சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா கெரூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் படுக்கை இல்லை என்று காரணம் காட்டி 4 தனியார் மருத்துவமனைகள் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இறுதியாக கலபுரகியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பெண் அழைத்து செல்லப்பட்டார். அங்கும் படுக்கை வசதி இல்லை என்று பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. இதனால் அந்த பெண் ஆம்புலன்சில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் தனது தாய்க்கு படுக்கை ஒதுக்கும்படி ஆஸ்பத்திரி முன்பு கதறி அழுதார். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோல துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா ஒசகெரே கிராமத்தை சேர்ந்த ஒருவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மீட்டு சிக்கநாயக்கனஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் சிகிச்சை கிடைக்காமல் அந்த நபர் இறந்தார்.

இதுபோல கோலாரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அப்போது ஒரு சிலர் வரிசையில் நிற்காமல் நேராக கொரோனா பரிசோதனை செய்ய சென்றனர். இதற்கு வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மோதல் உண்டானது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்